உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியல்

Published On 2023-01-04 07:36 GMT   |   Update On 2023-01-04 07:36 GMT
  • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கரிசல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளா மல் கடந்த மாதம் 26-ந் தேதி தும்மக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கடையை அக்றறக்கோரி சிந்துப்பட்டி பொதுமக்கள் சார்பில் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு பள்ளி நிர்வாகம் சார்பிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் இன்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News