உள்ளூர் செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள்.

மேலூர் செக்கடி பஜாரில் காய்கறி மார்க்கெட் நாளை முதல் இடமாற்றம்

Published On 2022-07-26 09:33 GMT   |   Update On 2022-07-26 09:33 GMT
  • மேலூர் செக்கடி பஜாரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் நாளை முதல் சந்தைப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
  • மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது .

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜாரில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த மார்க்கெட்டின் கட்டிடங்கள் பழமையானதாகவும் இடிந்து விழும் நிலையிலும் இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் ரூ. ஏழேமுக்கால் கோடி மதிப்பீட்டில் 110 கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

சில நாட்களுக்கு முன் அங்கு மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது . அதனை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட்டை மேலூர் சந்தைப்பேட்டைக்கு தற்காலி–கமாக இடமாற்றம் செய்வதற்காக அங்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 110 கடைகள் கட்டப்பட்டது.

ஆனால் திடீர் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அங்கு செல்ல மறுத்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை செய்தனர்.

அதன் பிறகும் காய்கறி வியாபாரிகள் செல்ல மறுத்ததால் நகராட்சி தலைவர் காய்கறி சங்க வியாபாரிகளை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தருவதாகவும், பொதுமக்கள் வந்து செல்ல வசதி செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

அதன் பேரில் காய்கறி சங்க வியாபாரிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். மேலூர் செக்கடி பஜாரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் புதிய கடைகள் கட்டும் வரை சந்தைப்பேட்டைக்கு தினசரி காய்கறி மார்க்கெட் மாற்றி நாளை முதல் அங்கு செயல்படும்.

பொதுமக்கள் சந்தைப்பேட்டையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்க நகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News