உள்ளூர் செய்திகள்

வையம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார். 

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார்-ஆர்.பி. உதயகுமார் பேட்டி

Published On 2022-10-08 09:20 GMT   |   Update On 2022-10-08 09:20 GMT
  • எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என்று ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
  • திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளம் ஊராட்சிக்குட்பட்ட வையம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளம் ஊராட்சிக்குட்பட்ட வையம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்த அவசர சட்டமானது 6 மாத காலத்துக்குத்தான் இருக்கும். நிரந்தர சட்டமாக ஆன்லைன் ரம்மியை கொண்டுவர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்-அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூடிய கடிதத்தை கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகரிடம் கொடுத்து ள்ளார்.

ஒரு பக்க கடிதத்தை எவ்வளவு நாட்கள் ஆய்வு செய்கிறார்? என்பது தெரியாது. அவர் ஆய்வு செய்து இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். ஆனால் சபாநாயகரின் செயல்பாடுகள் ஒருதலை பட்சமாக இருப்பது தெரிகிறது. எனவே சபாநாயகர் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் தமிழக அரசு கையாளவில்லை.கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வட கிழக்கு பருவமழைக்கும் முன்னதாகவே பாதிக்கப்படக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாத்தோம். அதேபோல் தற்போதைய தி.மு.க. அரசு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விடத்த குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திரளியில் தரைப்பாலம், கட்ராம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை ஆகியவற்றை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம், திருப்பதி, சரவணபாண்டி, சிங்கராஜ்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, கள்ளிக்குடி, துணை சேர்மன் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம், சிவரக்கோட்டை ஆதிராஜா, நிர்வாகிகள் பாண்டி, கண்ணபிரான், கோடீஸ்வரன், ரமேஷ், கப்பலூர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News