சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்
- குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் 3-வது வார்டான கல்லாங்குத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாலை வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லாங்குத்து பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
குடி தண்ணீருக்காக அவர்கள் நீண்டதூரம் செல்ல வேண்டி யிருந்தது. குடிநீர் பிரச்சி னையை சரிசெய்ய அதிகாரி களிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதை கண்டித்தும், குடிநீர், சாலை வசதியை செய்து தரக்கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர், வார்டு கவுன்சிலர் முத்துகுமார் தலைமையில் தேனூர் பஸ் நிறுத்தம் முன்பு திரண்டர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சோழவந்தான்- தேனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.