இரவு நேர மின்தடையால் பொதுமக்கள் அவதி
- மதுரை மேலக்கால் பகுதியில் இரவு நேர மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் கிராம பகுதிகளில் தற்போது இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் முதியோர், குழந்தைகள், பெண்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளி, கல்லூரி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோன்று இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மின்விநியோகம் சீராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற இரவு நேர மின்தடை ஏன் ஏற்படுகிறது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் கோடை காலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற நிலையில் சீரான மின் விநியோகத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலக்கால் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.