உள்ளூர் செய்திகள்

கண்மாய் நிரம்பியதையடுத்து பூஜை செய்த விவசாயிகள்.

மறுகால் பாயும் கூடக்கோவில் கண்மாய்

Published On 2022-12-17 07:43 GMT   |   Update On 2022-12-17 07:43 GMT
  • திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு பின் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
  • விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கோவில் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அதிசயமாக கூடக்கோவில் கண்மாய்க்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் வைகையாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் இந்த கண்மாய்க்கு வந்தடைந்தது.

தொடர்மழை மற்றும் வைகையாற்று தண்ணீரால் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1981-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக கூடக்கோவில் கண்மாய் நிரம்பியது. அதன்பின் கண்மாய் முழுவதும் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்த மழை காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

கண்மாய் நிரம்பியதை முன்னிட்டு அந்தப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கண்மாய் கலுங்கில் உள்ள கல்லை வழிபட்டனர்.

Tags:    

Similar News