உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை

Published On 2022-11-03 13:24 IST   |   Update On 2022-11-03 13:24:00 IST
  • மதுரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
  • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தாலும் உசிலம்பட்டி, வாடிப்பட்டி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் அந்த பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

சிட்டம்பட்டி -17, கள்ளந்திரி -8, தனியா மங்கலம்- 2,மேலூர் -3, சாத்தையாறு அணை- 26, வாடிப்பட்டி -70, திருமங்கலம் -5, உசிலம்பட்டி -90, மதுரை வடக்கு -17, தல்லாகுளம் -12, விரகனூர் -20, விமான நிலையம் -63, இடைய பட்டி -29, புலிப்பட்டி -11, சோழவந்தான் -43, மேட்டுப்பட்டி -39, குப்பனம்பட்டி- 35, கள்ளிக்குடி -4, பேரையூர்- 20, ஆண்டிப்பட்டி -53.

மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 56.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 587 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 1667 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.49 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2308 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 70 சதவீத கண்மாய், குளங்கள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News