உள்ளூர் செய்திகள்

கைதான மயில்ராஜ்.

பெற்றோருடன் சேர்ந்து சகோதரரும் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்

Published On 2022-07-24 09:01 GMT   |   Update On 2022-07-24 09:01 GMT
  • மதுரை வாலிபர் கொலை வழக்கில் பெற்றோருடன் சேர்ந்து சகோதரரும் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானது.
  • வீட்டில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறால், மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கீழே தள்ள முயன்றேன்.

மதுரை

மதுரை சொக்கலிங்க நகர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 27) என்பவர் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பொன்மேனி கிராம நிர்வாக அதிகாரி சுந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது படுகொலை செய்யப்பட்ட மாரி செல்வத்தின் தந்தை நாகராஜன், தாய் குருவம்மாள் ஆகியோர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், "மாரிச்செல்வம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். எங்களையும் சரமாரியாக தாக்கினார். நாங்கள் அவரை கழுத்தை நெரித்து கொன்றோம்" என்று தெரிவித்தனர்.

வயதான பெற்றோரால், மாரிச்செல்வத்தை எப்படி கொலை செய்ய முடியும்? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மாரிசெல்வத்தின் சகோதரர் மயில்ராஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்து வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். போலீசார் மயில்ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

சகோதரன் மாரிசெல்வத்தை கொன்றது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் மயில்ராஜ் கூறுகையில், "எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சொத்தை 15 நாட்களுக்கு முன்பு விற்றோம். அதில் சம பங்கு வேண்டும் என்று மாரிச்செல்வம் கேட்டு தகராறு செய்தார். இதன் காரணமாக எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மாரிச்செல்வம் நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் எங்களிடம் சொத்தில் பங்கு கேட்டு மீண்டும் தகராறு செய்தார். நான் அவரை சமாதானம் செய்தேன். அவர் என்னை சரமாரியாக தாக்கினார். பெற்றோர் எனக்கு ஆதரவாக பேசினர். இதனால் மாரிச்செல்வம் அவர்களையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இது என்னை ஆத்திரப்பட வைத்தது.

வீட்டில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறால், மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கீழே தள்ள முயன்றேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து மாரி செல்வத்தை, பெற்றோருடன் சேர்ந்து சகோதரரை கழுத்தை நெரித்து கொன்றதாக, மயில்ராஜை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News