மணலில் புதைந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு
- மதுரையில் மணலில் புதைந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
மதுரை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் நேற்று மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டபோது மணல் சரிவில் சிக்கி புதைந்து பலியானார். அவரது உடல் 5 மணிநேரம் போராடி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை பார்த்ததால் சக்திவேல் மணலில் புதைந்து பலியானதாக சக தொழிலாளர்கள் கூறினர்.
இதுபற்றிய புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த தனியார் கட்டிட நிறுவன உரிமையாளர் அசோகன், மேலாளர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகரில் நடப்பாண்டு மட்டும் 6 பேர் புதைக்குழிக்குள் சிக்கி பலியாகி உள்ளனர். மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் பழங்காநத்தம் கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இறங்கிய சிவகுமார் (வயது 45), சரவணன் ( 32), அலங்காநல்லூர் லட்சுமணன் (வயது 31) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விளாங்குடியில் கடந்த ஜூன் மாதம் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட ஈரோடு வீரணன் என்பவர், புதைகுழிக்குள் சிக்கி பலியானார். கூடல்புதூர், சொக்கலிங்கம் நகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில், சமையல்காரர் ரமேஷ் என்பவர் தவறி விழுந்து இறந்தார்.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் கூறுகையில், "மாநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள் ஈரப்பதத்துடன் உள்ளன. எனவே 10 அடிக்கு மேல் பள்ளம் உள்ள பகுதிகளில், மறுசீரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளோம்.
ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். விபத்தில் இறந்த சக்திவேலுக்கு இன்சூரன்ஸ் போடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசிடம் பேசி அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என்றார்.