உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும்

Published On 2023-03-10 07:43 GMT   |   Update On 2023-03-10 07:43 GMT
  • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

சோழவந்தான்

சோழவந்தானில் நகரி சாலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டெலிபோன் மற்றும் இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துவந்தனர். ஆனால் தற்போது இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்போது ஒரே ஒரு பணியாளர் வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டு மற்றும் இணைய இணைப்புகளை பெறுவது இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால் இந்த அலுவலகத்தை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற தொலைதொடர்பு துறை பணியாளர் மகாராஜன் கூறுகையில், ஆரம்பகாலங்களில் லேண்ட்லைனுக்குரிய எக்ஸ்சேன்ச் மட்டுமே செயல்பட்டு வந்தநிலையில், பின்னர் 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை கூடுதல் வசதிகள் பெற்று டவர் மூலம் தொலைதொடர்பு சேவையை அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பயனீட்டாளர்கள் என பலர் பெற்று வந்தனர். இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் கிடைக்காத நிலை தொடர்வதால் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கி சோழவந்தான் பி.எஸ்.என்.எல். அலுவலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News