உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் இருந்த முதியவரை தாக்கி பணம் பறித்த கும்பல்

Published On 2022-11-03 07:42 GMT   |   Update On 2022-11-03 07:42 GMT
  • திருமங்கலத்தில் குடிபோதையில் இருந்த முதியவரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அந்த முதியவரிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர்.

திருமங்கலம்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் காஷாமைதீன்(வயது64). தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இவர் திருமங்கலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வந்து பணிபுரிவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அந்த ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி கடை உரிமையாளரிடம் வேலை பார்த்ததற்கான மீதி ஊதியம் ரூ.11ஆயிரத்து500 பணத்தை வாங்கிக்கொண்டு தனது ஊருக்கு கிளம்பினார். அதற்கு முன்பு திருமங்கலம் தாலூகா அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அருகே இருந்த பெட்டிக்கடையில் வாழைப்பழம் சாப்பிட்டார்.

அப்போது காஷாமைதீனிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர். அவரிடமிருந்து பணத்தினை பறிக்க அவர்கள் திட்டம் தீட்டி காஷாமைதீனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவரை அந்த நபர்கள் மது அருந்த அழைத்துள்ளனர்.

காஷாமைதீனும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விருதுநகர் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மதுபான கடையில் மதுவாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கரிசல்பட்டி நான்கு வழிச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஆட்கள் இல்லாத இடத்தில் காஷாமைதீனை இறக்கிவிட்டு சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அவரிடமிருந்த ரொக்கபணம் ரூ.11ஆயிரத்து500 மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் சாலையோரம் மயங்கிக்கிடந்த காஷாமைதீனை மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காஷாமைதீன் பணிபுரிந்த ஜவுளிக்கடையை சேர்ந்த முகமது இத்ரீஸ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் மதுபான கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் காஷாமைதீனை தாக்கி பணம்-செல்போன் பறித்து சென்ற திருமங்கலம் கூழையாபுரத்தினை சேர்ந்த முத்துவேல்(19), சோமசுந்தரம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(19), 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News