உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது

Published On 2022-07-03 11:23 GMT   |   Update On 2022-07-03 11:23 GMT
  • மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
  • இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மதுரை

மதுரை வண்டியூர், சங்கு நகரில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை கைது செ ய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நோட்டமிட்டனர்.

அங்கு 10-க்கும் மேற்பட்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, 4 மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 3 கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை பாலாஜி நகர், செந்தில் மகன் அஜய் (20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, ஜெகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், இந்திரா நகர், சிவராமன் மகன் லோகேஸ்வரன் (20), முனிச்சாலை கான்பாளையம், பாபுஜி மகன் பிரேம்குமார் (19), செங்கல்பட்டு மாவட்டம், செண்டிவாக்கம், மாதா கோவில் தெரு, மனோஜ் குமார் (30) என்பது தெரிய வந்தது.

அவர்கள் கூறுகையில், "மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அஜய் மற்றும் முனிச்சாலை பிரேம்குமார் இருவரும் மதுரையில் கொள்ளை அடிப்பதற்காக நோட்டம் பார்த்து வந்தனர். இதில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அந்த பகுதிகளில் கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்டு வந்தோம். மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக 5 பேரும் வண்டியூரில் கூடி சதி திட்டம் தீட்டினோம். இதனை தெரிந்து கொண்ட போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்ததாக, 5 பேரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News