உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர். 

25 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது

Published On 2022-08-18 09:08 GMT   |   Update On 2022-08-18 09:08 GMT
  • மதுரை பகுதியில் 25 கிலோ கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மதுரை

மதுரையில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து புகார் வந்ததால் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷ னர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நேற்று வைகை வடகரை, குமரன் சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர்.அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். இதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 23 கிலோ 500 கிராம் கஞ்சா, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செல்லூர், கீழத்தோப்பைச் சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 42), அவரது மனைவி மகாலட்சுமி, கல்பாலம் செல்வீர் (26), மகேஸ்வரன் (42) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மதுரை உத்தபுரம் தோட்டத்தில் முதியவர் ஒருவர் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வருவதாக எழுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை சோதனை நடத்தினர். அப்போது முதியவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உத்தப்புரம் தெற்குதெருவை சேர்ந்த நாகன் (72) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News