உள்ளூர் செய்திகள்
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் சிறுத்தையை படத்தில் காணலாம்.

சோதனை சாவடி அருகே இரவு நேரத்தில் மரக்கிளையில் அமர்ந்திருந்த சிறுத்தை- கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

Published On 2022-12-22 04:14 GMT   |   Update On 2022-12-22 04:14 GMT
  • தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.
  • இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள், யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பண்ணாரி வனப்பகுதியில் சாலையோரம் புள்ளிமான்கள் கூட்டம் அடிக்கடி உலா வருவது வழக்கம். அதனால் இரை தேடி சிறுத்தைகள் அவ்வப்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை பார்க்க முடியும்.

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பண்ணாரி சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மின்னல் வேகத்தில் ஓடியபடி சாலையை கடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் உள்ள மரக்கிளையில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உட்கார்ந்து இருந்தது.

இந்த காட்சியை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த சிறுத்தை பின்னர் சாவகாசமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் பண்ணாரி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர் போலீசார் அச்சமடைந்துள்ளனர். சாலையில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News