உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே ஏரி நிரம்பி வீடுகளில் புகுந்த நீர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு வார்டு உறுப்பினர் நிவாரண உதவி

Published On 2022-10-18 09:08 GMT   |   Update On 2022-10-18 09:08 GMT
  • 32 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையாண்டாஹள்ளி ஏரி நிரம்பியுள்ளது.
  • கால்வாய்கள் முழுவதும் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயகோட்டை அடுத்து ஒடையாண்டஹள்ளி கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையாண்டாஹள்ளி ஏரி நிரம்பியுள்ளது.

ராயகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ஒடயாண்டஹள்ளி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மழை நீர் பெருக்கெடுத்து கோடியூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையறிந்த ஓடையாண்டஅள்ளி வார்டு உறுப்பினர் பூபதி மற்றும் ஓடையாண்டாஅள்ளி ஊர் பொது மக்கள் சார்பாக கோடியூரில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுவதும் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டது.

Tags:    

Similar News