உள்ளூர் செய்திகள்

அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகளுக்கு பிறகு சென்றாயப் பெருமாள் சாமி கோவிலில் கும்பாபிஷேகம்-கலெக்டர் பங்கேற்பு

Published On 2023-09-04 15:53 IST   |   Update On 2023-09-04 15:56:00 IST
  • அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகளுக்கு பிறகு சென்றாயப் பெருமாள் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • கும்பாபிஷேகம் விழாவில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பங்கேற்றார்.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராய காலத்தில் நடைபெற்றதாக வரலாறுகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இதன் கும்பாபிஷேக விழா மன்னர் காலத்திற்குப் பின் இன்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விழா கொடியேற்றத்துடன் விழாதொடங்கியது. தொடர்ந்து முதற்காலயாகவேள்வி மற்றும் கணபதி, லட்சுமி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று 2-ம் காலயாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்த குட ஊர்வலத்தின் போது தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பவித்திர தண்டத்தை ஊர்வலமாக கொண்டு வந்தார். பின்னர் மூலவர் விமான கோபுர கலசம், கருடாழ்வார் விமான கோபுர கலசம் மற்றும் கொடி மரம் உட்பட மூலவர் தெய்வங்களுக்கு அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றினர்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கமிட்டனர். கலச நீரானது பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது. இந்த கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

மேலும் சென்றாய பெருமாள் திருக்கோவில் 16.ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் மன்னர்களால் கோவிலின் உட்புறம் மரபு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதினால் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News