உள்ளூர் செய்திகள்

குமரன் குட்டை கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-02 09:21 GMT   |   Update On 2023-06-02 09:21 GMT
  • பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
  • கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.

வடவள்ளி,

கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.

மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.

தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.

Tags:    

Similar News