குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன்கோவில் சித்திரை திருவிழா-இன்று இரவு நிறைவு பெறுகிறது
- அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.
- இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி- அம்பாள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை மற்றும் சுவாமிகள் எழுந்தருளல் ஆகிய நிகழ்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. சிவனடியார்கள் இல்லங்குடி, சிவானந்த நடராஜன், ரமணகிரி, பண்டார சிவன்பிள்ளை ஆகியோர் தேவாரம் பாடி வந்தனர்.
சுவாமி, அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்படுதல், சமய சொற்பொழிவு மற்றும் விழா நாட்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு, கும்பபூஜை, அபிஷேகம், தீபாராதனை, திருமுறை பாடல்கள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கல், திருமுறை பண்ணிசை, நடராஜர் ஊருகுச் சட்டசேவை, நடராஜர் சிகப்பு, வெள்ளை, பச்சை சாத்தி புறப்பாடு, திருச்சுன்னம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜையுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.