விவசாயிகள் வராததால் வெறிச்சோடிய குறிச்சி உழவர் சந்தை
- கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.
- 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது.
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த குறிச்சி காந்திஜி ரோட்டில் உழவர் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பல வருடங்களாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சமீபத்தில் கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.
இதனையடுத்து உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. சந்தையில் உள்ள 60 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்பட்ட து. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை விட இந்த குறிச்சி காந்திஜி ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தை மிகவும் பரந்து விரிந்த இடம் மட்டுமன்றி வசதியான இடம் ஆகும். எத்தனை லோடு காய்கறிகள் வேண்டுமானாலும் இங்கு இறக்குவதற்கு இடவசதி உள்ளது. ஆனால் இந்த குறிச்சி காந்திஜி ரோடானது மிகவும் குண்டும், குழியுமாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதால், விவசாயிகள் இங்கு வர மறுப்பு தெரிவிக்கின்றனர்.
சரக்கு வாகனங்கள் கவிழ்ந்துவிடும் அளவுக்கு மோசமான நிலையில் சாலை உள்ளது. எனவே சாலை வசதி செய்து கொடுத்த பின்பு தான் நாங்கள் அங்கு வருவோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த உழவர் சந்தையை மாலை நேரத்தில் செயல்பட வைத்தால் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைத்து உழவர் சந்தையை வழக்கம்போல் செயல்பட வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உழவர் சந்தையில் மொத்தம் உள்ள 60 கடைகளில் 30 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 30 கடைகளுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் தயாராக உள்ளோம். ஆனால் விவசாயிகள் வர மறுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர், மேயர், துணை மேயர் ஆகியோர் வந்து உழவர் சந்தையை பார்வையிட்டு சென்றனர். மேலும் தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை செய்யப்பட்டது என கூறினர்.