உள்ளூர் செய்திகள்

பரவலாக மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2023-09-03 10:22 GMT   |   Update On 2023-09-03 10:22 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழைபெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
  • தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.'

ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 200 கன அடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 24.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நேற்று முன்தினம் 374 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 562 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 188 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள் (மில்லி மீட்டரில்):பெணுகொண்டாபுரம்- 50.2, கேஆர்பி அணை-40.4, தேன்கனிக்கோட்டை-24, பாம்பாறு-23, கிருஷ்ணகிரி-19, ஊத்தங்கரை-17.4, ராயக்கோட்டை-17, நெடுங்கல்-14.6, போச்சம்பள்ளி-14.4, பாரூர்- 7.8, அஞ்செட்டி- 4.4, ஓசூர்- 2.3 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 234.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

Tags:    

Similar News