உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அரசு மருத்துவமனை புதுப்பொலிவு பெறுகிறது

Published On 2023-06-17 14:44 IST   |   Update On 2023-06-17 14:44:00 IST
  • மருத்துவமனை புதுப்பொலிவுக்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது.

கோத்தகிரி,

தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்களில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு வெளிநோயாளிகள் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு உள்பட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன.

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ரத்த வங்கி, பிணவறைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் இங்கு உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் எழுப்பும் பணி இரவு பகலாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. அங்கு தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு, இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News