உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.

கொடைக்கானலில் வன விலங்குகள் கணக்கெடுப்பு முதற்கட்ட பணி நிறைவு

Published On 2022-07-13 10:46 IST   |   Update On 2022-07-13 10:46:00 IST
  • கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலி, சிறுத்தை உள்ளிட்ட ஊண்உண்ணிகள் பற்றிய கணக்கெடுப்பு தொடரும் என்று தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த 7 வனச்சரகங்களிலும் வன சரகர் தலைமையில் வனவர்கள், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட150க்கும் மேற்பட்டோர் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 6-ம் தேதி காலை தொடங்கிய இந்த வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணியானது தொடர்ந்து ஒரு வாரம் நீடித்தது. தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் தொடரப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றுடன் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் முதற்கட்ட பணி நிறைவடைந்தது. மொத்தம் 9 குழுக்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கொடைக்கானலில் காட்டெருமைகள், மான்கள், கேளை ஆடு, சருகுமான், புலி, சிறுத்தை, குரங்குகள், செந்நாய், கழுதை புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் எவ்வளவு உள்ளன என்பது பற்றி இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வன விலங்குகளை பார்த்தும், அவற்றின் காலடி தடங்களை அளவீடு செய்தும், வனவிலங்குகளின் எச்சங்களை ஆய்வு செய்தும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

கொடைக்கானல் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் இந்த பணிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது கணக்கெடுக்கும் முதற்கட்ட பணியானது நிறைவு பெற்றது. இதை அடுத்து கொடைக்கானல் வனக்கோட்டத்தில் உள்ள 7 வன சரகங்களிலும் சுமார் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலி, சிறுத்தை உள்ளிட்ட ஊண்உண்ணிகள் பற்றிய கணக்கெடுப்பு தொடரும். கண்காணிப்பு கேமராவில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் 2ம் கட்ட பணியாக 20 முதல் 25 தினங்கள் தொடரும்.

கேமராக்கள் அவ்வப்போது கண்காணிக்கப்படும். அந்த கேமராக்களில் வனவிலங்குகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும். இதற்கான வனக் குழுக்களும் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2ம் கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியின் போது ஆனைமலை புலிகள் காப்பக பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News