கடலூர் காராமணிகுப்பத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் கருவாட்டு சந்தை
- கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
- கருவாட்டு சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே காராமணிகுப்பத்தில் கருவாட்டு சந்தை உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை கூடுவது உண்டு. இந்த சந்தைக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான கருவாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த சந்தையில் கருவாடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் சேலம், ஈரோடு, சென்னை, விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
திருவிழா காலங்களில் இந்த சந்தையில் சுமார் ரூ.25 லட்சம் முதல் 50 லட்சம்வரை கருவாடுகள் விற்பனையாவது உண்டு. ஆனால் இந்த சந்தை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சந்தையில் வியாபாரிகள் தரையில் தார்பாய்களை விரித்துதான் வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கருவாட்டு சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கருவாடு வாங்க வரும் வெளியூர் வியாபாரிகள் முகம் சுளிக்கின்றனர்.
இதுகுறித்து அங்குவந்த பொது மக்கள் கூறுகையில், காராமணிக்குப்பம் கருவாடு சுவையாக இருக்கும், விலையும் குறைவு என்பதால் இங்கு வந்து வாங்கி செல்கிறோம். ஆனால் தற்போது சகதியாக காணப்படுவதால் சந்தைக்குள் செல்ல கஷ்டமாக உள்ளது.
சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், கருவாடுகளை வாங்கி செல்லும் மொத்த வியாபாரிகளுக்கும் வரி விதிக்கின்றனர். சேறும் சகதியுமாக உள்ளதால் வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு இந்த சந்தையை சீரமைக்க வேண்டும் என்றனர்.