உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை

Published On 2023-09-23 11:45 IST   |   Update On 2023-09-23 11:45:00 IST
  • தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை
  • மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம்,  

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக வாங்கல் அருகே மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் கட்டுமானம் உட்பட காங்கிரீட் கலவை தயார் செய்யும் பணிகளுக்கு போதுமான அளவு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அரசு அனுமதி இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆற்றுக்குள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் நம்பர் பிளேட் இல்லாத லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணலை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் தோட்டக்குறிச்சி காவேரி ஆற்று அருகே செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரம் மூலம் மணல் அள்ளி தங்களது நிறுவனத்திற்கு கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் அள்ளி செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை இருந்தும் அதை கண்டு கொள்ளாமல் உள்ளூரை சேர்ந்த சில மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News