புன்னம் சத்திரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
- தார் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளால் புன்னம் சத்திரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
- பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம்சத்திரம் பகுதிகளில் ஹோட்டல்கள் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதே போல மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகளும் மூட்டையாக கட்டப்பட்டு இங்கு வீசி செல்கின்றனர்.
இதனால் சாலையின் ஓரத்தில் நெடுதூரம் கழிவுகளாக கிடைக்கிறது. தற்பொழுது வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மழைநீர் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுகளில் கொசுக்கள் முட்டையிட்டு ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கழிவுகளை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் இதனை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.