- கிணற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.
- 11-ம் வகுப்பு படித்து வந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி லதா. இந்த தம்பதியின் மகன் பூமிஷ் என்கின்ற பிரதீப் (வயது 16). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பிரதீப் தனது சித்தப்பா மகன் சரண் என்பவருடன் அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி கிணற்றிற்கு மதியம் குளிக்க சென்றார். பிரதீப் மட்டும் கிணற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். சரண் கிணற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரதீப் கிணற்றில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மாயனூர் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி பிரதீப்பை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரதீப்பின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.