- இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்
- தோட்டக்குறிச்சியில் இயங்கும் கான்கிரிட் தயாரிக்கும் நிறுவனம் மணல் திருட்டில் ஈடுபடுவதால் சாலைகள் பழுதாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் அருகே தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிமெண்ட் மற்றும் சல்லி கலந்து கான்கிரீட் கலவை தயார் செய்யப்பட்டு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கான்கிரிட் லாரிகள் அங்குள்ள சாலைகளில் பகல், இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தோட்டக்குறிச்சியிலிருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்களை செல்ல முடியாத அளவுக்கு சீரழிந்து விட்டது. மேலும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல்களை அள்ளி கான்கிரீட் தயார் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.