மயான சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- தொண்டமாங்கினம் ஊராட்சி கவுண்டம்பட்டிக்கு மயான சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- குளித்தலை கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டதொண்டமாங்கினம் ஊராட்சி கவுண்டம்பட்டிக்கு மயான சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான தொண்டமாங்கினம் ஊராட்சி நான்காவது வார்டு கவுண்டம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதி மக்கள் இறந்தால் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டு வாரி பகுதியில் 1 1/2 கிலோ மீட்டர் தொலைவில் சென்று அடக்கம் செய்வது வழக்கம். மயான பாதை செல்வதற்கும் அப்பகுதி கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதும் அதே வழியில் தான் செல்கின்றனர். கடந்த 19-ந்தேதி கவுண்டம்பட்டியை சேர்ந்த முத்தலாட்சியம்மாள் (75) வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார், இவரை அடக்கம் செய்வதற்காக தூக்கி சென்ற போது காட்டு வாரி பகுதியில் மழை பெய்ததால் முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரில் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதனால் மயான பாதை மற்றும் கிராமத்திற்கு செல்வதற்கான சாலையை காட்டுவாரி கரை பகுதியில் அமைத்து அப்பகுதி மக்களுக்கு உதவிட பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.