தைப்பூசத்தை முன்னிட்டு கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம்
- கபிலர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தைப்பூச தினமான நேற்று அதிகாலை மகர லக்னத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தரும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று அதிகாலை கோவில் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கொடியேற்றி மகா தீபாராதனை காண்பித்தனர். 29-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் குதிரை வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தைப்பூச தினமான நேற்று அதிகாலை மகர லக்னத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தரும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், பரமத்திவேலூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளர் சண்முகம், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, தீர்த்த காவடி, இளநீர் காவடி , மயில் காவடி மற்றும் தேன் காவடி எடுத்து, ஆட்டம் ஆடி கோயிலை வந்தடைந்தனர். பெண்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விடியற்காலை வரை தீர்த்தக்குடங்கள், பால்குடங்களுடன் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே கபிலர்மலை சென்று பாலசுப்பிரமணிய சாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இன்று காலை பல்லக்கு உற்சவம், இரவு சத்தாபரணமும், நாளை இரவு சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடும், 8-ந் தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு ஆட்டு கிடா வாகனத்தில் சாமி புறப்பாடும், 9-ந் தேதி காலை சாமி மலைக்கு எழுந்தருளளும், இரவு விடையாற்றி உற்சவம் மற்றும் சர்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகிறது. திருத்தேர் விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோயில் திருத்தேர் திருவிழா குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.