திருவட்டார் அருகே கோவிலில் திருட்டு கண்காணிப்பு காமிரா பதிவில் சிக்கிய கொள்ளையனை தேடும் பணி தீவிரம்
- கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே காங்கரை சந்திப்பில் மணத்திட்டை இசக்கி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு தினமும் மாலையில் 5 மணி அளவில் நடை திறந்து பூஜை செய்வது வழக்கம். ஆடிச் செவ்வாய் நாளிலும் பூஜை செய்ய கோவிலுக்கு பூசாரி வந்தார்.
அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா கோபால கிருஷ்ணன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இந்த கோவிலின் அருகில் தான் திருவட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு போனது. அந்த சம்பவத்திலும் இது வரை திருடனை கண்டு பிடிக்கவில்லை. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.