உள்ளூர் செய்திகள்

சுசீந்திரத்தில் பாரதிய ஜனதாவினர் திடீர் மறியல்;பெண்கள் உள்பட 378 பேர் கைது

Published On 2023-09-11 07:59 GMT   |   Update On 2023-09-11 07:59 GMT
  • போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
  • மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் :

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பாரதிய ஜனதா சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் அய்யப்பன், வீரசூரப்பெருமாள், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சொக்கலிங்கம், ஜெகநாதன், சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News