உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலத்தில் ஒருங்கிணைந்த வேளாண் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு விதைகள்

Published On 2022-06-08 16:15 IST   |   Update On 2022-06-08 16:15:00 IST
  • முகாமில் ஏராளமான விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • இறுதியில் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார் ஒரு விவசாயிக்கு உளுந்து விதையை வழங்கினார்.
  • முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் இசக்கி பாண்டி செய்திருந்தார்.

கன்னியாகுமரி:

ராஜாக்கமங்கலம் ஊராட்சி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான முகாம் நடைபெற்றது. வேளாண் துறை, தோட்டக்கலை துறை, விதைச்சான்று துறை, கால்நடை மருத்துவ துறை உட்பட பலதுறையினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

வேளாண் துறை துணை இயக்குனர் ஊமைத்துரை வேளாண் திட்டம் மற்றும் பி.எம். கிசான் திட்டத்தில் புது விவசாயிகளை சேர்ப்பது, பி.எம். கிசான் கடன் அட்டை பெறுவது, பயிர் காப்பீடு செய்வது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை வகித்தார் துணைத் தலைவர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் கீதா கலந்துகொண்டு ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட மாநில திட்ட விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தோட்டக்கலை திட்டம் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் வினிதா விளக்க உரையாற்றினார்.

கால்நடை துறையில் செயல்படுத்தப்படும் திட்டம் மற்றும் மானியங்கள் பற்றி கால்நடைத்துறை உதவி மருத்துவர் ரவிக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியில் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார் ஒரு விவசாயிக்கு உளுந்து விதையை வழங்கினார்.

முகாமில் ஏராளமான விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண் துறை அலுவலர் வினோத் வரவேற்று பேசினார். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் இசக்கி பாண்டி செய்திருந்தார்.

Similar News