திருமண மண்டபத்தில் அரசு ஒப்பந்ததாரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து எட்வின்சிங் கைது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே புதுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி (வயது 33). அரசு ஒப்பந்ததாரர். இவருக்கும், ஆற்றூர் வட்ட விளை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் எட்வின்சிங் (32) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
எட்வின்சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆற்றூர் மங்களாநடை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு திருமண மண்டபத்தில் இளைஞர் ஒருவருடைய திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டான்லியை மண்டபத்தினுள் வைத்து திடீரென எட்வின்சிங் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்டான்லியின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற எட்வின்சிங்கை அப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த ஸ்டான்லி ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருவட்டார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து எட்வின்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞரை திருமண மண்டபத்தினுள் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.