உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்

Published On 2023-10-18 07:01 GMT   |   Update On 2023-10-18 07:01 GMT
புதிய கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தக்கலை :

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதநல்லூர் பேரூராட்சி யில் அமைந்துள்ளது கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். இந்த கட்டிடம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் பாளங்கள் கழன்று விழுந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் அங்கு தரை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் நோயாளிகள் சாக்கு பைகளை தரையில் விரித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் மருத்துவ பணிகள் செய்ய முடியாமல் பக்கத்தில் உள்ள மகப்பேறு நடக்கும் கட்டிடத்தில் வைத்து வெளி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவ உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கும் போதிய கட்டிட இட வசதி இல்லை. இதனால் புறநோயாளிகள் அலைக்கழிக்கபடுகிறார்கள். இந்த கட்டிடம் பழமையாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்துடன் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து போய் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனை கட்டிடத்தை இடித்து மாற்றி புதிய கட்டிடம் கட்ட முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிதியோன் ராஜ், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Tags:    

Similar News