உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி - பாரதிய ஜனதா நிர்வாகிகள் 70 பேர் மீது வழக்கு

Published On 2023-07-12 06:36 GMT   |   Update On 2023-07-12 06:36 GMT
  • கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டம்
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் :

சமூக வலைதளங்களில் மதரீதியான அவதூறு வீடியோ ஒன்றை பரப்பிய தாக இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில அமைப்பாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கனல் கண்ணனை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்துள்ளனர். கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் வடசேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ண குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன், ஆலோசகர் மிஷா சோமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், இந்து முன்னணி மண்டல தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News