உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-11-30 06:50 GMT   |   Update On 2022-11-30 09:47 GMT
  • பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார்
  • நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை

நாகர்கோவில் :

நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள பரசேரியை சேர்ந்த வர் அஜித்குமார் (வயது 49).

இவர் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்துக் கழக பணிமனையில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜீப் டிரைவராக உள்ளார். கடந்த ஒரு மாதமாக இவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தனக்கு பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அஜித் குமார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். இதனை கவனித்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அஜித்குமார் கூறுகையில், "நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜீப் டிரைவர் பணி ஒதுக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக எனக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். போராட்டம் நடத்திய பிறகும் என்னை கண்டுகொள்ளவில்லை. எனவே எனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும்" என்றார்.

இதனையடுத்து அவரை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அஜித் குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News