உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்

Published On 2022-08-03 08:10 GMT   |   Update On 2022-08-03 08:10 GMT
  • மீனவர்களின் படகுகளுக்கு காப்பீடு எடுப்பதில் அரசு உதவி செய்ய வேண்டும்
  • மத்திய மந்திரி எல்.முருகனிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

நாகர்கோவில்:

டெல்லியில் மத்திய மந்திரி முருகனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

அப்போது குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிக்கடி நிகழும் கடல் சீற்றத்தால் மீனவர் கிராமங்களில் கடல் நீர் புகுந்து சேதங்கள் விளைவிப்பதை தெரிவித்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக்கோரி மனு கொடுத்தார்.

மேலும் கடற்கரை கிராம சாலைகள் கடலால் அடித்து சொல்லப்படுவதால் மக்களின் பயண சிரமங்களையும் விவரித்தார். மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கடல் தடுப்பு சுவர் எழுப்பி கிராமங்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, இதற்காக மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கடலில் வழி தவறி அன்னிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அந்நாடுகளுடன் சிறப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விஜய் வசந்த் எம்.பி. மீண்டும் வலியுறுத்தினார். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் விபத்தில் சிக்கும் போது அவர்களை கால விரயம் செய்யாமல் மீட்பதற்கு ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் விரைவு படகுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மீனவர்களின் படகுகளில் தொலைதொடர்பு கருவிகள் பொருத்தவும் படகுகளின் காப்பீடு எடுப்பதில் அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இது தொடர்பான மனுவையும் அளித்தார்.

Tags:    

Similar News