உள்ளூர் செய்திகள்

தடை காலம் முடிவடைந்ததையொட்டி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 300 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன

Published On 2022-06-15 07:12 GMT   |   Update On 2022-06-15 07:12 GMT
  • மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது
  • மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்;

கன்னியாகுமரி :

மீன்களின் இனப் பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதி யில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொ டர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த சில நாட்களாக ஆயத்தமானார்கள்.

இதற்கிடையில் 3 நாட்கள் கடலில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 300 விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் பிடித்து வரும் உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்டங்கள்மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சின்ன முட்டம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்ட தொடங்கிவிட்டது.

Tags:    

Similar News