உள்ளூர் செய்திகள்

போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார்.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி

Published On 2022-10-10 09:52 GMT   |   Update On 2022-10-10 09:52 GMT
  • மார்த்தாண்டம் அருகே ஏஜெண்டு வீட்டு முன்பு போராட்டம்
  • சென்னை தம்பதி உள்பட 3 பேர் மீது புகார் கூறப்பட்டதால் பரபரப்பு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டு ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக பணம் கொடுத்தவர்கள் என்பதும் தற்ேபாது ஏமாந்து நிற்பதால் ஏஜெண்டு வீட்டு முன்பு திரண்டதாகவும் கூறினர்.

மேலும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

சென்னை மண்ணடி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் பெண் மற்றும் அவரது கணவர், குமரி மாவட்ட ஏஜெண்டு ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் கார்டன் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது என்றும் அதற்காக ஒரு ஆளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதனை நம்பி தமிழக-கேரள எல்லை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை கொடுத்து உள்ளனர்.

அதனை பெற்றுக் கொண்ட டிராவல்ஸ் நிறுவன பெண், விரைவில் விசா மற்றும் டிக்கெட் அனுப்பி தரப்படும் என்று கூறினார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் அளிக்க வில்லை. இதனையடுத்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவை இல்லை, அதே வேலை அமெரிக்க நாட்டில் உள்ளது. அதற்கான விசா தங்களிடம் கைவசம் உள்ளது. அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்தால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதனை நம்பியவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்துள்ளனர். இதனை யடுத்து மீண்டும் ரூ. 50 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக டிக்கெட் கிடைத்து நீங்கள் அமெரிக்கா செல்லாம் என்று கூற, அதனையும் நம்பி பணத்தை கொடுத்து விட்டு ஊருக்கு வந்துள்ளனர்.

ஆனால் வேலைக்கான உத்தரவு எதுவும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள்,மீண்டும் சென்னைக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்து உள்ளது.

அவர்களது எண்களுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து டிராவல்ஸ் நடத்தி வரும் பெண்ணின் வீடு இருக்கும் வட பழனி பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வீடும் பூட்டி கிடந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த 25 பேரும் குமரி மாவட்டம் வந்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தை வாங்கிய குமரி மாவட்ட ஏஜென்டான திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரூ.36 லட்சம் வரை தாங்கள் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அப்போது அவர் பணத்தை நாளை காலை 10 மணிக்குள் வழங்குவதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார். பாதிக்கப்பட்ட வர்கள் கூறும்போது தாங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இவர்களிடம் ஏமாந்து இருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News