உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் சுரேஷ்

மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பலியான பெயிண்டர் உடல் இன்று பிரேத பரிசோதனை

Published On 2023-01-23 07:59 GMT   |   Update On 2023-01-23 07:59 GMT
  • தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
  • இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

Tags:    

Similar News