கடையம் சார்பதிவாளரை இடமாற்றம் செய்யக்கூடாது -சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
- பொதுமக்களின் நலன் கருதி சார்பதிவாளரை இடமாறுதல் செய்யக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த சார்பதிவாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பின்னர் சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இளநிலை உதவியாளர் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மேலப்பாளையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த குமரேசன் என்பவர் பதவி உயர்வு பெற்று கடையம் சார்பதிவாளராக நியமிக்கப் பட்டார். இவர் சார்பதிவாளராக பதவி ஏற்ற பின்னர் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார். மேலும் போலி பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் இருப்பதுடன், அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேர்மையாக செயல்படும் இச்சார்பதிவாளரை சிலர் தங்களது சுய நலத்திற்காக வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நேர்மையாக செயல்படும் சார்பதிவாளரை மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.