உள்ளூர் செய்திகள்

சீறிப்பாய்ந்து வந்த காளையை வீரர் அடக்கிய காட்சி.

தவசிமடையில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

Published On 2023-02-19 13:20 IST   |   Update On 2023-02-19 13:20:00 IST
  • தவசிமடை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
  • ஜல்லிக்கட்டில் 14 வீரர்கள் காயமடைந்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே தவசிமடை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடைகளை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில் டாக்டர்கள் ஸ்ரீதர், ஸ்ரீமதி மற்றும் மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.

ஜல்லிக்கட்டில் 482 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார், ஆனந்த பிரபு, திலீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 140 பேரை காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 8.10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி,வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களை போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் புகையிலைபட்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட காளை மாட்டின் ஓனர் வீரமங்கை ஜெயமணி என்பவருக்கு அண்டா, கட்டில், பேஷன் ஆகிய பரிசுகளை பரிசாக பெற்று கொடுத்தது.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் ரகுமான்(24), பாலமேட்டைச் சேர்ந்த குமார்( 29), மேலூர் சேக்கிபட்டியை சேர்ந்த மனோஜ் (25), கோணபட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட 14 பேர் காயமடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி தலைமையில் புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, சேகர் பவுல்ராஜ் உள்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சாணார்பட்டி மாவட்ட கவுன்சிலர் விஜயன், தவசிமடை ஊராட்சி மன்ற தலைவர் எலிசபெத் ஹெலன் ராணி, ஊராட்சி செயலர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News