உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் நுழைவு வரி செலுத்துவதில் சிக்கல்: ரொக்கப்பணம் செலுத்தும் முறையை நீட்டித்து கால அவகாசம் வழங்க வேண்டும் -பிற மாநில வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை

Published On 2022-11-13 15:06 IST   |   Update On 2022-11-13 15:06:00 IST
  • ஆன்லைனில் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
  • நேரடியாக ரொக்க பணம் வசூலிக்கும் முறையையே நீட்டித்து கால் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் தனியார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழைவதற்கு வரி செலுத்தும் முறையில் மாற்றம் செய்து ஆன்லைனில் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். எனவே நேரடியாக ரொக்க பணம் வசூலிக்கும் முறையையே நீட்டித்து கால் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடி பகுதியில் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைந்துள்ளது. இதன் வழியாக ஒரு நாளில் சராசரியாக அண்டை மாநிலங்களிலிருந்து இருந்து சுமார் 7,000 வாகனங்கள் நுழைவு வரி செலுத்தி தமிழகத்திற்குள் வருவது வழக்கம். அவ்வாறு நுழைவு வரியை ரொக்கப் பணமாக இது நாள் வரை வாகன ஓட்டிகள் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஆன்லைனில் நுழைவு வரி கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்,காய்கறிகள், மலர்கள் போன்ற சரக்கு வாகனங்களும் தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், நுழைவு வரி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இது மட்டுமன்றி, ஆன்லைனில் நுழைவு வரி செலுத்தும்போது, கர்நாடகா மற்றும் பிற மாநில பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கப்பெறாததால் வரி செலுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில நேரங்களில் இணையதளத்தில் இது குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்வதற்கு பல மணி நேரம் கால தாமதம் ஆவதாலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவது மட்டுமின்றி வாகனங்களை நம்பி அதில் பயணிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ரொக்க பணமாக நேரடியாக நுழைவு வரி வசூல் செய்யும் முறையையே சிறிது காலத்திற்கு நீட்டித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News