உள்ளூர் செய்திகள்

கூட்டு பிரார்த்தனை செய்த மக்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.


உலக மக்கள் நலன் வேண்டி காயல்பட்டினத்தில் இஸ்லாமிய கூட்டு பிரார்த்தனை

Published On 2023-02-23 09:04 GMT   |   Update On 2023-02-23 09:04 GMT
  • காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.
  • நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.விழாவில் தினமும் காலையில் நபிமொழிகள் ஓதப்பட்டு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.

காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் முகைதீன் அப்துல் காதிர் தவ்ஹீத் இறைவணக்கம் பாடினார். அன்றைய நபிமொழிகளுக்கான விளக்கவுரையை மௌலவி முகம்மது முஹ்யித்தீன் நிகழ்த்தினார்.இதனை தொடர்ந்து அகமது அப்துல் காதிர் ஆலிம் கூட்டு துஆவின் சிறப்புகளின் பற்றி விளக்கினார்.முத்துவாப்பா அறிமுக உரையாற்றினார்.

பின்னர் உலக மக்கள்நலன் வேண்டி தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளிவாசல் கதீபு ரகமத்துல்லாஹ் ஆலிம் கூட்டு பிரார்த்தனையை நடத்தினார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற் றனர். இதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்திய மௌலவி ரகமத்துல்லாஹ் ஆலிம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மாலையில் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் சார்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக இன்று காலை நேர்ச்சை வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மஜ்லிஸுல் புகாரி சபையின் தலைவர் அகமது அப்துல் காதிர் ஆலிம், துணைத்தலைவர் ஹபீபுர் ரகுமான் ஆலிம், மேலாளர் காஜா முகைதீன் ஆலிம், இணைச் செயலாளர்கள் மூசா நெய்னா, நூருல் அமீன், ஹாமீது ரிபாயி, துணைச் செயலாளர் ஜெய்னுல் அமீன் ஆகியோரும் விழா கமிட்டி நிர்வாகிகளான சொளுக்கு செய்யிது முகம்மது சாஹிப், ஜாபர் சாதிக், முகம்மது தம்பி ஆகியோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செந்தில் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

விழாவை முன்னிட்டு காயல்பட்டினத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News