உள்ளூர் செய்திகள்

குன்னூரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு

Published On 2023-07-02 08:48 GMT   |   Update On 2023-07-02 08:48 GMT
  • குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
  • கால்நடைகளை பராமரிக்க வசதியில்லாதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் (திமுக) தலைமையில் நடந்தது. இதில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன் கூட்டத்தில் பேசும்போது, என் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை, கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆணையர் பதிலளிக்கையில், அந்த பகுதியில் துப்புரவு பணிகளை விரைவாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்தபடியாக நகராட்சி உறுப்பினர் சரவணன் பேசுகையில், என் வார்டு அடங்கிய பகுதியில் ஆடு-மாடு வதைக்கூடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அங்கு ஏற்கெனவே செத்த கால்நடைகளை இறைச்சிக்காக கொண்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆணையர் பதில்அளிக்கையில், அனைத்து பகுதிகளிலும் மாதம் 4 முறை மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

காட்டேரி வார்டு உறுப்பினர் குமரேசன் பேசும்போது, என் வார்டில் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலைக்கு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லை. எனவே பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என் வார்டில் அனைத்து பகுதிகளிலும் போதிய மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைவர் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

குன்னூர் நகராட்சி கூட்டத்தின்போது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் சிறிய அளவில் வீடுகளை கட்டும்போது அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். மேலும், நகராட்சியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடக்கிறது. எனவே அவற்றை பிடித்து சென்று பராமரிக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு கால்நடைகளை பராமரிக்க வசதியில்லை, எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் உறுதியளித்தார்.

முன்னதாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ள குன்னூா் நகா்மன்ற உறுப்பினா் ராமசாமிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம் ராஜா (திமுக), அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Tags:    

Similar News