ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக நூதன முறையில் ரூ. 73 ஆயிரம் திருட்டு
- பாண்டி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக கடந்த 21ஆம் தேதி சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம். அறையில் இருந்த வாலிபர் ஒருவரிடம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார். வாலிபர் கார்டை வாங்கி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்து உள்ளார்.
முதியவரும் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வாலிபர் அதேபோன்ற ஏ.டி.எம். கார்டை மாற்றி பாண்டியிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தை எடுத்த பாண்டி அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பின் அடுத்தடுத்து வங்கியில் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வரவே அதிர்ச்சி அடைந்த பாண்டி தனது மகனிடம் கூறி உள்ளார். அவரும் வாங்கி பரிசோதித்த போது பாண்டியன் வங்கி கணக்கிலிருந்து ரூ. 73 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனால்அதிர்ச்சி அடைந்த பாண்டி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வங்கி ஏ.டி.எம்.-ல் மூன்று முறையும், நகைக்கடை ஒன்றில் ஒரு முறையும் என மொத்தம் 73 ஆயிரம் எடுத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்த வாலிபர் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.