உள்ளூர் செய்திகள்

சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரூ.20 லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் -முதியோர் உதவி தொகை பெறுவோர் குமுறல்

Published On 2022-12-13 10:14 GMT   |   Update On 2022-12-13 10:14 GMT
  • ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
  • முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூளகிரி,

தமிழகம் முழுவதும் முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு வருடம் தோறும் அரசு இலவசமாக வேட்டி , சேலைகள் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சுற்றியுள்ள சில கிராமங்களில் இந்த இலவச வேட்டி , சேலைகளை விநியோகிக்க ஒவ்வொருவரும் ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த பகுதிகளில் நேரடியாக வந்து விநியோகிப்பதால் ஏற்படும் பெட்ரோல் செலவுக்காக இந்த தொகையை வசூலிப்பதாக அதிகாரிகள் கூறுவதாக ஓய்வூதியம் பெறுவோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நிரஞ்சன்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தரப்பில் கூறியுள்ளதாவது:-

இப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சுமார் 5,000 ஓய்வூதியம் பெறுவோருக்கு வேட்டி,சேலைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் இதுவரை 90 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வழங்க முடிந்தது.

தற்போது மீதம் உள்ளவர்களுக்கு கிராம உதவியாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 பணம் கேட்கும் விவகாரம் தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசின் உதவி தொகையை வைத்து வாழ்க்கையை ஓட்டும் முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News