உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-06-15 14:32 IST   |   Update On 2022-06-15 14:32:00 IST
  • அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
  • ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதை தீவிரப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாகவும் இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அதிகாரிகளுடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேலம் உட்கோட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார்.இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர்கள், பறக்கும் படை தாசில்தார்கள், ஆகியோருடன் உண வுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு முறைகேடாக ரேஷன் அரிசி கடத்தும் குற்றவாளிகளை கண்காணிப்பது குறித்தும், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதை தீவிரப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன் (கிருஷ்ணகிரி), சதீஷ் (வேலூர்), கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News