உள்ளூர் செய்திகள்

ஓசூரில் குட்கா கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-07-24 16:00 IST   |   Update On 2023-07-24 16:00:00 IST
  • தமிழக போலீசார் சோதனைச் சாவடி அமைத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கடத்தலைத் தடுத்து வருகின்றனர்
  • அண்மைக் காலமாக இச்சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை.

ஓசூர்,

தமிழக, கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக குட்கா, கஞ்சா, மது பாட்டில்கள் மற்றும் வனப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

இக்கடத்தலை தடுக்க ஓசூர் ஜுஜுவாடி, பூனப்பள்ளி, கக்கனூர், சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் சோதனைச் சாவடி அமைத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கடத்தலைத் தடுத்து வருகின்றனர்.

இதில், பாகலூர் அருகே சம்பங்கிரி வழியாக கர்நாடக, ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்நிலையில், சம்பங்கிரி பகுதியில் தமிழக போலீசார் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். இவ்வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனைக்குப் பின்னர் அனுப்பி வைத்து வந்தனர். மேலும், இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலம் வாகனப் போக்குவரத்து பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், அண்மைக் காலமாக இச்சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு குட்கா, கஞ்சா, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

அதே போல, தமிழகத்திலிருந்து ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு அதிக அளவில் இவ்வழியாக ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே, சம்பங்கிரி சோதனைச் சாவடியில் கடந்த காலங்களைப்போல, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News