உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி

Published On 2023-05-08 09:47 GMT   |   Update On 2023-05-08 09:47 GMT
  • கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
  • நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றார்

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற அவர் மீது தண்ணீர் ஊற்றினர். விசாரணையில் அவர், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ் (வயது53) என்பது தெரியவந்தது.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு சொந்தமான 1 அரை சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீசார் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News